ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும்
கிழக்கு மாகாண நிகழ்வு இன்று (27) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த நுண்கலை பீடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் பெறுபேறுகளைப் பெற்ற 10 மாணவர்கள் வீதம் 360 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.
மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் சமீபத்தில் வட மாகாணத்தில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாவது திட்டம் தென் மாகாணத்திலும் மூன்றாவது திட்டம் கிழக்கு மாகாணத்திலும் செயல்படுத்தப்பட்டது. எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிகழ்வில் கருத்துத்தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஜனாதிபதி நிதியம் இதுவரை உதவி தேவையான யாரையும் கைவிடவில்லை என்றும், நாட்டின் பிள்ளைகளின் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஜனாதிபதி நிதியம் யாருடைய தனியார் நிதியமல்ல என்றும், அது நாட்டு மக்களின் பங்களிப்புகளுடன் இயக்கப்படும் நிதியம் என்றும் சுட்டிக்காட்டிய சபாநாயகர், அதன் நன்மைகள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கிழக்கு மாகாண அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் பிரதானிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.