– தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுபெற்ற 361 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 ஊக்குவிப்பு வழங்கப்பட்டது
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மாவட்ட அளவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற திறமைசாலிகளை கௌரவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் தொடங்கியுள்ளது.அதன்படி, தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) காலை ருகுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 06 பாடத்திட்டங்களின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற 10 மாணவர்கள் வீதம் 361 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36.1 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, ஜனாதிபதி நிதியத்தை முறைப்படுத்தவும், அதன் சேவைகளை விஸ்தரிக்கவும், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த கால நடைமுறைகளில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு,நன்மைகள் பெறத் தகுதியானவர்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும், பிராந்திய ரீதியாக பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முக்கிய கருவி கல்விதான் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் , பிள்ளைகள் இந்த சலுகையை முறையாகப் பயன்படுத்தி, சிறந்த கல்வியாளர்களாகவும், நல்ல பிரஜைகளாகவும் வாழ்க்கையை வெற்றிபெற்று அதன் மூலம் நாட்டையும் தேசத்தையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் மேலும் கூறினார்.
இதுவரை இருந்த ஜனாதிபதியின் நிதியை தற்போதைய அரசாங்கம் மக்கள் நிதியாக மாற்ற முடிந்துள்ளதாகவும், மக்களின் நல்வாழ்வுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனத்தை மாற்ற முடிந்துள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
அரசியல் அடியாட்களின் சிகிச்சை மற்றும் பயணத்திற்காக ஜனாதிபதி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அது ஒரு பொது நல நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
இந்த புலமைப்பரிசில் பெற்று இலவசக் கல்வியின் ஊடாக முன்னேற்றம் அடையும் மாணவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, எதிர்காலத் தலைவராக மாறிய பிறகு, இந்த நாட்டிற்கும் அதன் பிரஜைகளுக்கும் வழங்க வேண்டிய சேவைகளைப் புறக்கணிக்கக்கூடாது என்றும், பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து கற்றுக்கொண்டு நாட்டையோ அல்லது மக்களையோ திருடவோ அல்லது ஏமாற்றவோ கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் நினைவுபடுத்தினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், உலகைக் காண்பதற்காக பறந்து செல்வதற்காக கல்வி எனும் சிறகுகளை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் என்றும், கல்வி அவர்களை மனிதாபிமான குடிமக்களாக மாற்ற உதவும் என்றும் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கல்விக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், ஜனாதிபதி இதற்காகச் செயல்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் கல்வியில் திறமையான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கல்வி மூலம் மாணவர்களை வளப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இங்குள்ளவர்களில் பலர் இலங்கையையோ அல்லது உலகையோ ஆளும் பல இடங்களில் இருப்பார்கள் என்றும், அவர்கள் மனிதாபிமான குடிமக்களாக இல்லாவிட்டால், கல்வியில் நாம் செய்யும் முதலீடு சிறந்த பலனைத் தராது என்றும் அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார சிரமங்களைக் கொண்ட மாணவர்கள் உயர்கல்வியை வெற்றிகரமாகத் தொடரவும் வாழ்க்கையில் வெற்றி பெறவும் இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளதாகவும் அதற்காக ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக நன்றியுரையாற்றிய காலி, சவுத்லெண்ட் கல்லூரி மாணவி சித்மினி மதநாயக்க கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எல்.எம்.அபேவிக்ரம, லால் பிரேமநாத், அரவிந்த செனரத், ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் பி.ஏ. ஜெயந்த, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிமல் சில்வா மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள்,அரசு அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.