P R E S I D E N T S F U N D
  • prefund@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் தென் மாகாண பிரதேச செயலகங்களின் துறைசார் அதிகாரிகளுக்கான செயலமர்வு

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு விஸ்தரிப்பது தொடர்பான விசேட செயலமர்வு தொடரின் தென் மாகாண செயலமர்வு நேற்று (05) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்க ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி,பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பணியாற்றும் துறைசார் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிநெறி நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு அண்மையில் வட மாகாணத்தில் இந்தப் பணி தொடங்கப்பட்டது.

அதன் மூன்றாவது கட்டமாக தென் மாகாண செயலமர்வு நேற்று(05) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் வகிபாகம் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதிய செயலாளருமான ரோஷன் கமகே, கலந்து கொண்டோருக்கு விளக்கம் அளித்தார். கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்தும் மருத்துவ உதவி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது முதல் அங்கீகாரம் வழங்குவது வரை மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் ஒப்புதலுக்குப் பிறகு மருத்துவ உதவி செலுத்தும் செயல்முறை குறித்து ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இதன் போது தெளிவுபடுத்தினார்கள்.

அத்தோடு,துறைசார் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், பங்கேற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வறுமை ஒழிப்புக்கான நிவாரணங்கள், கல்விப் புலமைப்பரிசில் வழங்கல், கல்வியில் சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவித்தல் , விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவுகள், தேசிய அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களை கௌரவித்தல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தற்போது ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படுகின்றன.

47 ஆண்டுகளாக கொழும்பிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும், இந்த புதிய திட்டத்தின் கீழ் எந்தவொரு பிரதேச செயலகத்தின் மூலமும் நன்மைகள் எதிர்பார்க்கும் மக்களுக்கு தற்பொழுது கிடைக்கின்றன.

ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு எடுத்த முடிவின் பயனாக, மக்களுக்கு இந்த வசதி கிடைப்பதோடு அதிகமான மக்களுக்கு நன்மைகள் பெற்றுக் கொடுக்கவும் சிறந்த சேவைகளை வழங்கவும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் இதன் வாயிலாக குறைக்கப்படுகிறது.

மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன, காலி மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் பிமல் சில்வா உள்ளடங்களாக பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 100 ற்கும் மேற்பட்ட துறைசார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top